உலகியல் வாழ்வில் ஒவ்வொரு மனிதனின் பயணமும், நவகிரகங்களின் ஆளுமையிலும், அனுசரிப்பிலும் தான் பயணப்படுகின்றது என்பது அனைவரும் அறிந்ததே.
ஒரு மனிதனின் ஜாதகம் அவரின் வாழ்நாள் நிகழ்வை பிரதிப-க்கும் சூட்சம கண்ணாடியாகும். அவரின் வாழ்க்கை எந்த இடத்தில் வளரும், எந்த இடத்தில் முடங்கும் என்கின்ற கணிதம் அறிந்து இருந்துவிட்டால் போதும். இந்தப் பயணத்தில் வென்றுவிட முடியும். அப்படி ஒரு சிறிய கணிதம்தான் நீசம் கூறும் கவனமாகும்.
ஆம்; ஒவ்வொரு லக்னங்களுக்கும் லக்னாதிபதி எங்கு நீசம் அடைகின்றாரோ அதை சார்ந்த விஷயத்தில் கவனமாக இருந்தாலே பாதி விஷயங்களில் வெற்றியை கையாள முடியும். இதை எப்படி? லக்னத்தோடு பொருத்த முடியும் என்பதைக் காணலாம்.
மேஷம்
மேஷ லக்னத்திற்கு லக்னாதிபதி செவ்வாய் சந்திரனின் வீடான நான்காம் இடத்தில் நீசம் பெற்றுவிடும். இதனால் உயர் கல்வி மிகவும் கவனமாக தேர்ந்தெடுப்பது சிறப்பினைத் தரும். மட்டுமல்லாமல் தாயார்வழி உறவுகளின்மூலம் விரோதம், இணக்கமற்ற தன்மை, போன்றவற்றையும், உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் மிக கவனமாகவும், குறிப்பாக நான்காம் பாவகம் கூறுகின்ற கருப்பை, மற்றும் இதயம் போன்ற உள்ளுறுப்புகளுக்கு தனி கவனத்தை அளிப்பது சிறப்பை அளிக்கும். நான்காம் இடம் சொத்து, வீடு, முதலீடு போன்றவற்றையும் குறிப்பதனால் சொத்துகள் வாங்குவது மற்றும் விற்பது. முதலீடுகளை வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் மிக விழிப்புணர்வுடன் செயல்படும்பொழுது இந்த நீச பலன்கள் மறுக்கப்படுகின்றது. மேலும் செவ்வாய் மண்மனை சார்ந்த விஷயமாகவும் அமைவதால், மண் சார்ந்த முதலீட்டில் மிகவும் விழிப்புணர்வும், கவனமும், தேவை என்பதை உணரவேண்டும். உணரும்பட்சத்தில் மிகப்பெரிய இழப்புகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளமுடியும்.
ரிஷபம்
ரிஷப லக்னத்திற்கு உண்டான சுக்கிரன் தனது வீட்டிற்கு ஐந்தாம் வீட்டில் கன்னி ராசியில் நீசம் அடைகின்றார். இது கால புருஷனுக்கு ஆறாம் வீடும். எனவே குழந்தைகளுக்காக கடன் வாங்குவது, குழந்தைகளின் கடனை ஏற்றுக்கொள்வது, முறை தவறிய காதலில் ஈடுபடுவது, திருமணத்திற்கு பிறகு வரக்கூடிய ஈர்ப்பின்வசம் சிக்குவது போன்றவற்றாலும். சூதாட்டம், மறைமுக வருமானத்தை தேடும் தன்மை, குலதெய்வ அருள் இல்லாமை, இவற்றால் பிரச்சினைகளைச் சந்திக்கும் லக்னமாக இந்த ரிஷப லக்னம் நீசத்தின்மூலம் பெறுகின்றது.
மிதுனம்
லக்னாதிபதி புதன் மீன வீடான காலபுருஷனுக்கு 12-ஆவது இடத்திலும், தனக்கு பத்தாவது இடத்திலும், நீசம் பெறுகின்றார். இதன் விளைவாக சொந்தத் தொழிலின்மூலம் பெரும் பாதிப்பை அடையக்கூடிய ராசியாக இது திகழ்கின்றது. மேலும் மாமனார்- மாமியார் போன்ற உறவுகளினால் சிக்கலும், பட்டம், பதவிகளுக்காக பண பரிமாற்றத்தை கைகொள்ளும் சூழலையும், மறைமுகத் தொடர்புகளையும், வேலைக்கு செல்லும் இடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் தனக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் இணக்கமற்ற தன்மையையும், இவர்களின் மனம் பெற்றுக்கொண்டே இருக்கும்.
கடகம்
லக்னாதிபதி சந்திரன் தன் வீட்டிற்கு ஐந்தாம் பாவகத்திலும், காலபுருஷனுக்கு எட்டாம் பாவகத்திலும், நீசம் அடைவதனால் பூர்வீக ஊரில் அல்லது சொத்தில் வசிக்கும் தன்மையினால் சில பிரச்சினைகளைச் சந்திக்கும் சூழல் இவர்களுக்கு உருவாக்கும். தொழில் முதல்கொண்டு உறவுகள் முதல்கொண்டு அனைத்திலும் ஒரு ரகசிய தன்மைகளை இவர்கள் கையாளுவதனால் பல சிக்கல்களை அனுபவிக்க நேரும். குறிப்பாக பங்கு சந்தை, சீட்டுகள் போன்ற விஷயங்களில் கவனமுடன் இருப்பது சிறப்பு மறைமுக தொடர்புகளும், குழந்தைகள் வழியில் சில பிரச்சினைகளையும் சந்திக்கும் சூழலை சந்திரன் நீசமாகி வழங்கி விடும்.
சிம்மம்
லக்னாதிபதி சூரியன் தன் வீட்டிற்கு மூன்றாம் வீட்டிலும், கால புருஷனுக்கு ஏழாம் வீட்டிலும் நீசமாகும் தன்மையானது சகோதரர் வழிகளில் இணக்கமற்ற தன்மையை கையாள வழிவகுக்கும். சிம்மம் சீரழிவது சினேகிதத்தினால் என்பார்கள். அப்படி நண்பர்களாலும், கூட்டாளிகளாலும், வஞ்சிக்கபடக்கூடிய ஒரு ராசி இந்த சிம்ம ராசியாகும். குறிப்பாக மூன்றாம் இடத்தில் நீசமாகும் தன்மை ஒரே பாலின உறவுகளை மேம்படுத்தி இதன்மூலம் பிரச்சினைகளை அனுபவிக்கும் சூழலை வழங்குகின்றது.
கன்னி
லக்னாதிபதி புதன் தன் வீட்டிற்கு ஏழாம் பாவகத்திலும் கால புருஷனுக்கு 12-ஆம் பாவகத்திலும் நீசம் அடைவதனால் சமூகம் சார்ந்த விரயங்களும், களத்திறம் சார்ந்த விரயங்களும், இவர்களுக்கு நேருவதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக கூட்டுத் தொழில் கூட்டாளிகளுடன் இணைந்து நிலம் வாங்குவது, நண்பனின் குழந்தை கல்வி கற்கும் அதே பள்ளியில் தங்களின் குழந்தைகளை சேர்ப்பது போன்ற சூழல்களினால் சில இடர்களை சந்திக்கும் சூழலை உருவாக்கும். இவர்களுக்கு நல்ல பொருத்தம் மிகுந்த களத்திரம் அமைப்பது சிறப்பு. வாழ்க்கைத் துணைமூலம் பல பிரச்சினைகளை அனுபவிக்கும் சூழல் இவர்களுக்கு உருவாக்கும்.
துலாம்
லக்னாதிபதி தன் வீட்டிற்கு 12-ஆம் பாவகத்திலும் கால புருஷனுக்கு ஆறாம் பாவகத்திலும் நீசம் அடைவத னால் மகான்கள், குருமார்கள் என்று வேடமிட்ட போலீசாமியார்களிடம் சரணடையும் தன்மை இவர்களைச் சார்ந்ததே, இதன்மூலம் சில பிரச்சனைகளை அனுபவிக்கும் சூழலை வழிவகுக்கும். குறிப்பாக சிறை, நோய், மறைமுக வருமானம், அதை சேர்க்கும் தன்மை, போன்றவற்றினால் இவர்களுக்கு பிரச்சினைகள் வரும்.
விருச்சிகம்
லக்னாதிபதி செவ்வாய் தன் வீட்டிற்கு ஒன்பதாம் பாவகத்திலும், காலபுருஷனுக்கு நான்காம் பாவகத்திலும், நீசம் அடையும் தன்மையானது தந்தை வழி சார்ந்த சொத்துகளின் மூலம் பிரச்சினைகளையும், உயர்கல்வி, பட்டம், மற்றும் பட்டய படிப்பு, வெளிநாட்டிற்கு செல்லும் சூழல் போன்றவற்றினால் பிரச்சினைகளை வழங்கும். குறிப்பாக இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்பொழுது இந்த பிரச்சினையின் தீவிரம் மேலும் உயர்த்தப்படுகின்றது. மறைமுக வருமானம் சீட்டுகள், பங்கு சந்தை போன்றவற்றின்மூலம் குடும்பத்திற்கு தெரியாமல் சேர்க்கும் இந்த வருவாய் பெரும் பிரச்சினையை கொடுக்கும்.
தனுசு
லக்னாதிபதி குரு தன் வீட்டிற்கு இரண்டாம் பாவகத்திலும் கால புருஷனுக்கு பத்தாம் பாவகத்திலும் நீசம் அடைவதனால் வருவானம் சார்ந்த விஷயத்திலும், தொழில் சார்ந்த விஷயத்திலும், வாழ்வின் இறுதிநாள்வரை கவனமாக இருக்கவேண்டும் என்பது உறுதி. நண்பர்களுக்கு பணம் கொடுத்து ஏமாறுவது, குழந்தைகளுக்காக அபரிவிதமான தொகையை தானமாக அளிப்பது அல்லது தங்களின் சொத்துகளை தாங்கள் வசிக்கும் காலத்திலேயே குழந்தைகளுக்கு வழங்கிவிடுவது, போன்றவற்றின்மூலம் பெரும் பாதிப்பை அடையும் ராசிகளில் இந்த தனுசு ராசியும் ஒன்று. நிதி நிறுவனங்களை நம்பி பண முதலீடுசெய்து பணத்தை இழக்கும் சூழல் தனுசை சார்ந்தது.
மகரம்
லக்னாதிபதி சனி ஐந்தாம் பாவகத்தில் நீசம். இவர்களின் வாழ்க்கையையே குழந்தைகளுக்காக அர்ப்பணிக்கும் ஒரு தன்மையை இவர்கள் கை கொள்வார்கள். இந்த சூழல் இவர்களின் வாழ்வில் சில நெருடல்களை வழங்கும், குறிப்பாக குலதெய்வம் சார்ந்த அருள் இல்லாமல் இருப்பது, பூர்வீகத்தினால் பெரும் பாக்கியம் இல்லாமல் இருப்பது, பங்காளிகள் மற்றும் மண்மனை சார்ந்த விஷயங்களில் பிரச்சினைகளைச் சந்திப்பது, அரசு, அரசுவழியில் பயணிக்கும் நபர்களுடனான விரோதத்தை வளர்த்துக்கொள்வது போன்றவற்றை எதிர்கொள்ளவேண்டிய சூழல் இந்த மகர ராசிக்கு இயல்பிலேயே அமைந்து விடும்.
கும்பம்
லக்னாதிபதி சனி தன் வீட்டிற்கு மூன்றாம் பாவகத்திலும் காலபுருஷனுக்கு முதல் பாவ கத்திலும் நீசம் அடையும் தன்மை சகோதரர்கள் வழியிலும், மாமனார்- மாமியார், வழியிலும் நண்பர்கள் மூலமும் பிரச்சினைகளை அனுபவிக்கும் சூழல் அமையும். குறிப்பாக ஒப்பந்தங்கள், ரிஜிஸ்ட்ரேஷன் போன்றவற்றின்மூலம் சொத்துகளை இழக்கும் தன்மையும், கையெழுத்து, வாக்குவாதம் போன்றவற்றின்மூலம் மனதிற்கு நெருடலான விஷயங்களையும், கையாளவேண்டிய தன்மை இவர்களுக்கு அமைந்துவிடும்.
மீனம்
லக்னாதிபதி குரு தன் வீட்டிற்கு பதினோராம் பாவகத் திலும், காலபுருஷனுக்கு பத்தாம் பாவகத்திலும் நீசம் அடையக்கூடிய தன்மை நிதி, தொழில், குழந்தைகள் போன்ற விஷயத் தில் பெரும் இன்னலை தந்து செல்லும். குறிப்பாக குழந்தை களின் ஆசைகளுக்காக பெரும் பணத்தை இழக்கும் சூழலும், குழந்தைகளின் வளர்ச்சிக்காக மிக கடினப்படும் சூழலையும், மீன ராசிக்கு இந்த குரு 11-ஆமிடத்தில் நீசமாகும் தன்மை வழங்கிவிடும். இயல்பிலேயே ஒவ்வொரு ராசிக்கும் நிகழக்கூடிய கடினமான காலகட்டங்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் சற்று கவனமாக பயணித்தால் வாழ்வில் பெரும் பிரச்சினைகளில் இருந்து தப்பித்து விடமுடியும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/22/murugan-2026-01-22-12-29-34.jpg)